அமெரிக்க அரசியல்வாதிகளைக் கொலை செய்ய முயன்றதாக பாகிஸ்தானியர் கைது
அமெரிக்கா அந்நாட்டின் அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய முயன்றதாகப் பாகிஸ்தானிய ஆடவர் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறது.
அவருக்கு ஈரானுடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
முறியடிக்கப்பட்ட சதித்திட்டத்தில் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் குறிவைக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆசிஃப் மெர்ச்சன்ட் (Asif Merchant) எனும் அந்தச் சந்தேக நபர் கடந்த மாதம் டெக்சஸில் கைதுசெய்யப்பட்டார்.
அமெரிக்காவிற்குச் செல்லும் முன்பு அவர் சிறிது காலம் ஈரானில் இருந்தாக அதிகாரிகள் கூறினர்.
படுகொலைச் சதித்திட்டத்தை நிறைவேற்ற மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளை நாடியபோது அவர் கைது செய்யப்பட்டார்.
2020ஆம் ஆண்டு ஈரானின் புரட்சிக் காவற்படைத் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கச் சதித்திட்டம் தீட்டப்பட்டது.
அப்போது அதிபராக இருந்த திரு. டிரம்ப் சுலைமானி மீது வானூர்தித் தாக்குதல் நடத்த அனுமதியளித்திருந்தார்.
இருப்பினும் ஜூலை மாதம் திரு. டிரம்ப் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிக்கும் ஆசிஃபுக்கும் தொடர்பிருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.