பங்ளாதேஷ் முன்னாள் அமைச்சர், அதிகாரிகளுக்குப் பொருளியல் தடை விதிக்குமாறு கோரிக்கை.
பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா அண்மையில் பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்குக் கீழ் பணிபுரிந்த முன்னாள் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் பொருளியல் தடை விதிக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவாமி லீக்கின் பொதுச் செயலாளர் ஒபைதுல் காதர், முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமால் ஆகியோர் மீது மனித உரிமை மீறல் குற்றம் சாட்டப்பட்டதற்காக பொருளியல் தடை விதிக்குமாறு அமெரிக்க காங்கிரசின் 6 உறுப்பினர்கள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் ஆகியோரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தினர்.
அவர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி, கூட்டாகக் கையொப்பமிட்ட ஒரு கடிதத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். பங்ளாதேஷில் அவாமி லீக் தலைமையிலான முன்னாள் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
“நடந்து முடிந்த ஒடுக்குமுறைக்காகவும் உயிரிழப்புகளுக்காகவும் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார வேண்டிய நேரமல்ல இது. இந்த உயிரிழப்புகளுக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாக இருந்தவர்கள் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் இது. அடிப்படை மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் உண்டு. எங்களுடன் நட்புறவில் உள்ள நாடுகளுக்கும் சரி, இல்லாத நாடுகளுக்கும் சரி அடிப்படை மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு ஆதரவளிக்கத் தயாராகவுள்ளோம்,” என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டோகெட் தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தின் வழி அமைதியான முறையில் போராடிய மாணவர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்று டோகெட் தெரிவித்தார்.
“புதிய இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். இருப்பினும் நாட்டில் மாணவர்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து எண்ணற்ற உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக ஹசினா பதவி விலகியதும் பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபெல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் ஆகஸ்ட் 8ஆம் தேதி பொறுப்பேற்றார். அதை அமெரிக்கா வரவேற்றிருந்தது. முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் விரைவில் தேர்தலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்ளாதேஷில் ஒரு சாராருக்கு மட்டும் அரசாங்கப் பணிகளில் அதிகமான இடங்கள் ஒதுக்கப்படுவதைக் கண்டித்து, கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து அங்கு வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்தாடின.
நான்கு முறையாக பிரதமர் பதவி வகிக்கும் ஹசினா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியில் குறைந்தபட்சம் 300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.