பிகாரில் சித்தேஷ்வர்நாத் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
பிகாரில் சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.
பிகார் மாநிலம், ஜெகனாபாத்தில் உள்ள பாபா சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஆண்டுதோறும் புனித ஷ்ராவண் மாதத்தில் நடைபெறும் திருவிழாவுக்காக பக்தர்கள் ஏராளமானோர் நள்ளிரவு முதலே குவிந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நெரிசலில் சிக்கி, 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். கோயிலில் இருந்த பக்தர் ஒருவர் கூறுகையில், பூ விற்பனையாளருடன் ஏற்பட்ட சண்டையில் தன்னார்வலர்கள் தடியடி நடத்தினர்.
இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது, அப்போது நிர்வாகத்தினர் யாரும் இல்லை. காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தால் இது நடந்தது என்றார். இதனிடையே கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் லத்திகளைப் பயன்படுத்தியதை ஜெகனாபாத் துணைப் பிரிவு அதிகாரி விகாஷ் குமார் மறுத்துள்ளார்.