கோல்கத்தா பெண் மருத்துவர் கொலை: டெல்லி அரசு மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம்.
கோல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள பத்து அரசு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்களும் செவிலியர்களும் தொடங்கியுள்ளனர் என்று இந்து தமிழ் திசை தெரிவித்தது.
டெல்லியில் இயங்கிவரும் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆர்எம்எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை, ஜிடிபி, ஐஎச்பிஏஎஸ், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை ஆகியவற்றின் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து, தங்கள் பணியை புறக்கணித்து இந்த போராட்டத்தை திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் தொடங்கினர்.
புறநோயாளிகள் பிரிவு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் வார்டு சிகிச்சை போன்ற பணிகளை மருத்துவ பணியாளர்கள் புறக்கணித்துள்ளதாக டெல்லி மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சார்ந்த பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதி மேற்குவங்க தலைநகர் கோல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்ட பெண் மருத்துவர் அங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார்.
இந்த கொலை தொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
“இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டபோது, தான் அணிந்திருந்த ஆடையை சஞ்சய் ராய் அலசியிருக்கிறார். தடயத்தை அழிக்கும் நோக்கில் இதனை செய்துள்ளார். இருந்தும் ரத்த கறை படிந்த அவரது காலணியை கண்டெடுத்தோம். கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்,” என்று காவல்துறை ஆணையர் வினீஷ் கோயல் தெரிவித்தார்.