இணையத்தில் பரவலாகப் பேசப்படும் Raygun… யார்?
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையிலும் ‘Raygun’ என்பவரைப் பற்றிய பேச்சு இணையத்தில் தொடர்கிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேச்சல் கன் (Rachael Gunn) இவ்வாண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரேக் (Break) நடனப் போட்டியில் பங்கெடுத்துத் தோல்வியுற்றார்.
அவர் போட்டியில் எந்தப் புள்ளிகளையும் பெறவில்லை.
36 வயதாகும் ரேச்சல் ‘Raygun’ என்றழைக்கப்படுகிறார்.
ரேச்சலின் நடனத்தைக் கேலி செய்து பலர்
இணையத்தில் காணொளிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளியில் அவர் கங்காருவைப் போன்று துள்ளிக் குதிப்பதாகச் சிலர் கூறினர்.
ரேச்சலின் நடன அசைவுகளைப் பலர் குறைகூறியிருந்தனர்.
இப்படிப்பட்ட திறனை வைத்துக்கொண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க இயலுமா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.
“நம் வாழ்நாளில் இது போன்று எத்தனை முறை மேடையில் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கும்? தனிப்பட்ட முறையில் முத்திரை பதிக்கவேண்டும் என்று எண்ணினேன்,” என்றார் ரேச்சல்.
ஆஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஆனா மியர்ஸ் (Anna Meares) ரேச்சலைத் தற்காத்துப் பேசியிருக்கிறார்.
“இணையத்தில் ரேச்சலைப் பற்றிய கருத்துகள் வருத்தமளிக்கின்றன,” என்றார் அவர்.
ரேச்சல், சிட்னியின் Macquarie பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.
அவர் 2017ஆம் ஆண்டில் முனைவர் பட்டப் படிப்பை முடித்தார்.