திருண்ணாமலையில் 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்த 6 வயது சிறுமி உயிரிழப்பு!
திருண்ணாமலையில் 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்த நிலையில், 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… ஆசையாக வாங்கி குடித்த குளிர்பானம் விஷமானதா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது… சிறுமியின் உயிரை பறித்தது எது?
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜ்குமார் – ஜோதிலட்சுமி. இவர்கள் இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதியின் 6 வயது மகள் காவியாஸ்ரீ ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று இவர், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள பெட்டிக் கடையில் பத்து ரூபாய்க்கு விற்கப்படும் குளிர்பானம் ஒன்றை வாங்கி வந்து அருந்தியுள்ளார்.
குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளி மயங்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை தூக்கிக்கொண்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை ராஜ்குமார், தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.10 ரூபாய்க்கு விற்கப்படும மலிவு விலை கூல்ட்ரிங்ஸை வாங்கி குடித்ததால் தான், தனது மகள் இறந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தனது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் போன்று, வேறு எந்த குழந்தைக்கும் நிகழாத வண்ணம், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
குளிர்பானம் குடித்ததால் தான் சிறுமி இறந்தாரா அல்லது உடல் நிலை பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னரே தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை பெசன்ட் நகரில் குளிர்பானம் மற்றும் ரஸ்னா வாங்கி குடித்த 13 வயது சிறுமி தாரணி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அவ்வப்போது சிறுவர்கள், குளிர்பானம் குடித்ததில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.இந்த நிலையில், செய்யாறு அருகே குளிர்பானம் குடித்த நிலையில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?