“பைடன் தேர்தலிலிருந்து விலக்கப்பட்டது ஒரு சதி..!” – டொனால்ட் ட்ரம்ப் (Video)
`கமலா ஹாரிஸ் வெற்றிப்பெற்றால், நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு சென்றுவிடும். நாம் இஸ்ரேலிடம் இருப்பதை போன்ற பாதுகாப்பு அம்சமான தாக்குதல்களை தடுக்கும் டோமை உருவாக்க வேண்டும்.” – ட்ரம்ப்
அமெரிக்காவில், நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிபர் வேட்பாளாராக குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். ஜோ பைடன் வேட்பாளராக இருந்தபோது, ட்ரம்புக்கு ஆதரவு பெருகிய நிலையில், கமலா ஹாரிஸ் வேட்பாளாராக களம் இறங்கியபிறகு போட்டி சூடுபிடித்திருகிறது. இதற்கிடையில், ட்ரம்புக்கு ஆதரவை வெளிப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ் தளத்தின் சிஇஓ எலான் மஸ்க், தன் எக்ஸ் பக்கத்தில் ட்ரம்பை நேர்காணல் செய்திருக்கிறார். இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த நேர்காணலை சுமார் 1.2 பில்லியன் மக்கள் கேட்டுவருகின்றனர்.
இதில், அவரிடம் அமெரிக்க பொருளாதாரம், நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுவருகிறது. இந்த விவாதத்தின்போது ட்ரம்ப், “மிக முக்கியமான விவாத நிகழ்ச்சியில், ஜோ பைடனுடனான விவாதத்தில் நான் அவரை மோசமாக தோற்கடித்தேன். அதனால்தான், சதி செய்யப்பட்டு அவர் தேர்தலிலிருந்து வெளியேற்றப்பட்டார். என்னை நோக்கி வந்த தோட்டாவை எனக்கு நன்கு தெரியும்… அப்படியிருந்தும் நான் உயிர்பிழைத்திருக்கிறேன். கடவுளை நம்பாதவர்கள் இனி இது குறித்து சிந்திக்க வேண்டும்.
அமெரிக்க பொருளாதாரம் பணவீக்கத்தால் ஒரு பேரழிவில் இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் நிறைய பணத்தை சேமித்தனர். இன்று அவர்கள் தங்கள் பணத்தை சேமிக்க முடியாமல் முழுவதுமாக பயன்படுத்தி, கடன் வாங்கி செலவழிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து கமலா ஹாரிஸ் வெற்றிப்பெற்றால், நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு சென்றுவிடும். நாம் இஸ்ரேலிடம் இருப்பதை போன்ற பாதுகாப்பு அம்சமான தாக்குதல்களை தடுக்கும் டோமை உருவாக்க வேண்டும்.
உலகிலேயே மிகச் சிறந்த அயர்ன் டோம்-ஐ நாம் வைத்திருக்கப் போகிறோம். நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியம். நான் அதிபராக இருந்தபோது, ஈரான் உடைந்திருந்தது. அவர்களிடம் தீவிரவாதத்திற்கான பணம் இல்லை. அந்த நிலை தொடர்ந்திருந்தால் இஸ்ரேல் ஒருபோதும் தாக்கப்பட்டிருக்காது. தற்போது நம்மிடம் ஒரு குறைபாடுள்ள அரசு இருக்கிறது. ஒரு மாதத்தில் மில்லியன் கணக்கான அகதிகள் நாட்டுக்குள் வருகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கமலா ஹாரிஸ் நடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவர்கள்தான் தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தனர். இன்னும் ஐந்து மாதங்கள் மீதமுள்ளன. ஆனால் அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.” என்றார்.