ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆகஸ்ட் 22ல் நாடு முழுவதும் போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு.
ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவர் மாதவி புரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டன்பர்க் கடந்த சனிக்கிழமை கட்டுரை வெளியிட்டது.
அதானியின் போலி நிறுவனம் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில், செபியின் தலைவர் மாதவிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்த வெளிப்படையான விசாரணை வேண்டும் என்றும் செபி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் புதுடெல்லியில் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்றது.
நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால், “செபி தலைவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் அமலாக்க இயக்குநரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
“தற்போது நாட்டில் நடக்கும் மிகப் பெரிய ஊழல்களில் ஒன்றான ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்து போராட்டம் நடத்த ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தவும் முடிவெடுத்துள்ளோம்,” என்றார்.