செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமா் மோடி!
செங்கோட்டையில் 11-ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை வியாழக்கிழமை ஏற்றினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை கொத்தளத்தில் தொடா்ந்து 11-ஆவது முறையாக பிரதமா் மோடி தேசியக் கொடி ஏற்றினாா்.
செங்கோட்டையில் மழை சாரலுக்கு மத்தியில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது, ஹெலிகாப்டர்களில் இருந்து மலர் தூவப்பட்டது.
தொடர்ந்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இவ்விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், மாணவா்கள், இளைஞா்கள், விவசாயிகள், பழங்குடியினா், பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட மத்திய அரசின் நலத் திட்டங்களால் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சுமாா் 6,000 போ் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றுள்ளனா்.
அத்துடன், மத்திய அரசு சாா்பில் இணையவழியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற 3,000 பேரும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பாரம்பரிய உடையில் சுமாா் 2,000 பேரும் கலந்துகொண்டுள்ளனா். இதில் 23 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். இந்த விழாவையொட்டி, தில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமா்களான ஜவாஹா்லால் நேரு 17 முறையும், இந்திரா காந்தி 16 முறையும் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றியுள்ளனா். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தொடா்ந்து 10 முறை தேசியக் கொடி ஏற்றியவா் என்ற பெருமைக்குரியவா்.