தனமல்வில தேசிய பாடசாலை மாணவி கூட்டு பலாத்காரம்… மேலும் 04 மாணவர்கள் கைது…

தனமல்வில தேசிய பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் மேலும் நான்கு மாணவர்களை லுணுகம்வெஹர பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.
லுணுகம்வெஹர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களும், தனமல்வில தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் 15 மற்றும் 16 வயதுடையவர்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனமல்வில பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் தனமல்வில பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது நேற்று முன்தினம் (14) மாலை மூன்று மாணவர்களும் இன்று (15) காலை மேலும் ஒரு மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் லுனுகம்வெஹர பாடசாலையொன்றிற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போதே முதலில் இந்த மாணவர்களால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட மாணவர்களை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 21 மாணவர்கள், 39 வயதுடைய பெண் ஒருவர், தனமல்வில தேசிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவின் ஆசிரியர் மற்றும் ஆலோசகரான ஆசிரியர் ஒருவரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

இதில் 14 மாணவர்கள் நன்னடத்தைக்கும், ஒரு பெண் உட்பட மூன்று மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதிபர், பிரதி அதிபர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் குறித்து சுகாதாரத்துறை மற்றும் மருத்துவமனை மட்டத்தில் பாரபட்சமற்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.எம்.பி.பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.