ஆகஸ்ட் 17ல் (இன்று) இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் : பெண் மருத்துவர் பாலியல் கொலை கொந்தளிப்பு.

பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதுப் பெண் பயிற்சி மருத்துவர் அண்மையில் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதுமுள்ள மருத்துவத் துறையினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, அச்சம்பவத்திற்கு நீதி கேட்டு மருத்துவர்களும் மருத்துவக் கல்வி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், ஒருநாள் வேலை நிறுத்தத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதன் தொடர்பில் இந்திய மருத்துவச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோல்கத்தா மருத்துவமனையில் நிகழ்ந்த கொடூரக் குற்றத்திற்கும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆகஸ்ட் 17 சனிக்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அரசு மருத்துவமனை, புதன்கிழமை நள்ளிரவு அடித்து நொறுக்கப்பட்டதற்கு சம்பவ இடத்திலிருக்கும் தடயங்களை அழிப்பதே நோக்கம் என்று கோல்கத்தா உயர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்துடன், அத்தாக்குதல் தொடர்பான வழக்கையும் சிபிஐ வசம் ஒப்படைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கேட்டும் குற்றமிழைத்தோர்க்கு மரண தண்டனை விதிக்கக் கோரியும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமையன்று கோல்கத்தாவில் பேரணியாகச் சென்றார்.

ஆறு மணி நேரத்திற்குள் வழக்கு பதிய அறிவுறுத்து
இதற்கிடையே, மருத்துவர்களோ மருத்துவப் பணியாளர்களோ தாக்கப்பட்டால் ஆறு மணி நேரத்திற்குள் வழக்கு பதியவேண்டும் என்று நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்தியச் சுகாதார அமைச்சு குறிப்பாணை அனுப்பியுள்ளது.

முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவுசெய்யும் பொறுப்பு முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட மருத்துவ நிலையத்தின் தலைவரைச் சேர்ந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.