கான்பூர் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
கான்பூரில் உள்ள கோவிந்த்புரி ரயில் நிலையம் அருகே ரயில் எண் 19168 சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதமோ, யாருக்கும் எந்த காயமோ ஏற்படவில்லை.
விபத்து குறித்து வடக்கு மத்திய ரயில்வேயின் (என்சிஆர்) மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி சஷிகாந்த் திரிபாதி பிடிஐ செய்தி நிறுவனத்து அளித்த பேட்டியில், உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கி ரயில் எண் 19168 சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது, சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையத்திற்கு இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதமோ, யாருக்கும் எந்த காயமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று கூறினார்.
மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
“தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கல்லின் மீது மோதியதால் விபத்து நிகழ்ந்ததாகவும்,” இதில் ரயில் இன்ஜினின் கால்நடை பாதுகாப்பு மோசமாக சேதமடைந்துள்ளதாக ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
விபத்து குறித்து பயணி விகாஸ் தெரிவிக்கையில், “வாரணாசியில் இருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் அகமதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். ரயில் கான்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஒரு பெரிய சத்தம் கேட்டது, ரயில் பெட்டிகள் குலுங்கத் தொடங்கியது. நான் மிகவும் பயந்துவிட்டேன், ஆனால் ரயில் நின்றுவிட்டது.” ரயில் பெட்டிகள் தடம் புரண்டபோது ரயில் மிகக் குறைந்த வேகத்திலே சென்று கொண்டிருந்ததாகவும், ரயில் நின்றதால், பயணிகள் தங்கள் பெட்டிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறத் தொடங்கினர்.
அவர்களில் பெரும்பாலோர் உதவிக்காக ரயில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்திருந்தவர்களை அழைத்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என அவர் தெரிவித்தார்.
“சம்பவம் நடந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். அருகிலுள்ள ரயில் பாதையின் ஓரத்தில் எங்களது உடைமைகளுடன் நாங்கள் காத்திருந்தோம்” என்று மற்றொரு பயணி கூறினார்.
உத்தரப்பிரதேச நிவாரண ஆணையர் ஜி.எஸ்.நவீன் குமார் கூறுகையில், “பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, மேலும் பயணிகள் அனைவரும் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் அந்த பகுதியில் செல்லும் ஏழு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் மூன்று ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
விபத்து நடந்த இடத்தில் இருந்து கான்பூர் ரயில் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவைத்தவிர, எட்டு பெட்டிகள் கொண்ட மெமு ரயில் கான்பூரில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு பயணிகளை கான்பூருக்கு கொண்டு செல்வதற்காக புறப்பட்டுள்ளது, இதனால் அவர்களை அந்தந்த இடங்களுக்கு அனுப்ப கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்று அவர் கூறினார்.
உதவி எண்கள் அறிவிப்பு: ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக ரயில்வேத் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
பிரயாக்ராஜ்: 0532-2408128, 0532-2407353, கான்பூர்: 0512-2323018, 0512-2323015, மிர்சாபூர்: 054422200090, 7291 59702, அகமதாபாத்: 07922113977, பனாரஸ் நகரம்: 8303994411 , கோரக்பூர்: 0551-2208088.
இவைத் தவிர, ஜான்சி ரயில் பிரிவுக்கான பின்வரும் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன : விரங்கனா லட்சுமிபாய் ஜான்சி – 0510-2440787 மற்றும் 0510-2440790. ஓரை – 05162-252206, பண்டா- 05192-227543, லலித்பூர் ஜேஎன் – 07897992404 ஆகிய உதவி எண்களைத் தொடபு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.