கோல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாட்டில் மருத்துவர்கள் போராட்டம்.

சிவகங்கை: கோல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆகஸ்ட் 17 ஆம் தேதி, புறநோயாளிகள் பிரிவைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

முன்னதாக, கோல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 18 அரசு மருத்துவமனைகள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) கறுப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி காலையில் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், தேசிய மருத்துவர் மற்றும் மருத்துவமனைப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தவும் அரசு மருத்துவமனைகளில் இரவில் மருத்துவர்கள் தங்குமிடங்களில் போதிய வசதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.