ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன? – தமிழரசின் எம்.பிக்களிடம் வினவிய இந்தியத் தூதுவர்.
வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடு என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவினார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்படி கேள்வியைத் தொடுத்தார்.
அத்துடன் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பிலும், அது குறித்து தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றியும் இந்தியத் தூதுவர் வினவினார்.
இதன்போது தாம் பொதுவான கருத்துக்களைத் தெரிவித்தோம் என்று சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் தமிழ் மக்கள் தொடர்பான உறுதிமொழிகள் குறித்தும் தம்மிடம் இந்தியத் தூதுவர் கேட்டறிந்தார் என்றும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் குறிப்பிட்டனர்.