கொல்கத்தா மருத்துவர் வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதாகியிருக்கும் சஞ்சய் ராயிக்கு உண்மைக் கண்டறியும் உளவியல் பரிசோதனையை சிபிஐ செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளது.

சிபிஐ விசாரணையின் போது, சஞ்சய் ராயி அளித்த வாக்குமூலம் வேறுபட்டுள்ளதால், ’பாலிகிராஃப்’ சோதனை செய்வதற்கு அனுமதி கோரி சிபிஐ தரப்பில் திங்கள்கிழமை நீதிமன்றத்தை நாடினர்.

சிபிஐயின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், மத்திய தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் கொண்ட குழு சஞ்சய் ராயிக்கு இன்று காலை உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தொடர்ந்து மனநல சோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு சிபிஐ திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், விசாரணையின் போது சொன்ன தகவல்களும் உண்மை கண்டறியும் சோதனையின்போது கூறும் தகவல்களும் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர் போராட்டங்களை அடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷிடமும் 4 நாள்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி முழுவதும் தடயவியல் உள்ளிட்ட சோதனைகளை திங்கள்கிழமை செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.