கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை.. மூடி மறைக்க மம்தா அரசு செய்த 10 தவறுகள்!
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் மேற்கு வங்க அரசை இதில் மிகக் கடுமையாகச் சாடியிருந்தது. இந்த விவகாரத்தில் மம்தா அரசும் கொல்கத்தா போலீசாரும் செய்த 10 மிகப் பெரிய தவறுகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு சுமார் 2 வாரங்கள் ஆகும் நிலையில், இதை மூடி மறைக்க மேற்கு வங்க அரசு பல தவறுகளைச் செய்துள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்.
1. குற்றம் நடந்த நாளில் அதை மூடி மறைக்க மேற்கு வங்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. உண்மையை மூடிமறைக்கவே மம்தா அரசு முயன்றதாக அங்குள்ள இடதுசாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அங்குள்ள செமினார் ஹாலில் மிக மோசமான நிலையில், மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், இதைத் தற்கொலை என்று சொல்லி மூடி மறைக்கவே அம்மாநில அரசு முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
2. உயிரிழந்த பெண் மருத்துவரின் உடலைப் பார்க்க அவரது பெற்றோர்களை சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்துள்ளனர். மேலும், விசாரணை நடக்கும் போதே அவசர அவசரமாகப் பெண் மருத்துவரின் உடலைத் தகனம் செய்துள்ளனர்.
3. தங்கள் மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்று உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் கூறி வந்தனர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க மம்தா பானர்ஜி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். இதுவும் அங்கே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
4. ஆர்ஜி மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் தான் இந்தக் குற்றச் சம்பவம் நடந்துள்ளது. விசாரணை நடக்கும் போதே அந்த செமினார் ஹால் அருகே இருந்த கழிப்பறை சுவர் அவசர அவசரமாகப் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆதாரங்களை அழிக்கவே இந்த பணிகள் உடனடியாக நடந்ததாகவும் விமர்சனங்கள் உள்ளன.
5. குற்றம் நடந்த போது ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷை பாதுகாக்க முயல்வதாக மம்தா அரசு மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தைத் தற்கொலை என்று மூடி மறைக்க முயன்ற சந்தீப் கோஷ் மீது இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
6. அடுத்து இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் நடந்த போது அதை மேற்கு வங்க அரசு மிக மோசமாகக் கையாண்டது. மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்த போது அவர்களை அழைத்துப் பேசாமல், அவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று மறைமுகமாக அம்மாநில அரசு அழுத்தம் கொடுத்தது.
7. கடந்த ஆக். 14ம் தேதி மருத்துவமனை அருகே நடந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. பலர் மருத்துவமனை உள்ளே சென்று அடித்து நொறுக்கினர். போலீசார் மருத்துவமனைக்கு உரியப் பாதுகாப்பு வழங்கவில்லை. திரிணாமுல் கட்சியினரே இந்த வன்முறையை நடத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
8. மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் மம்தா அரசு அதிக கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கே கால்பந்து போட்டி ஒன்று நடக்க இருந்தது. ஆனால், போராட்டம் நடக்குமோ என்று அஞ்சி மேற்கு வங்க அரசு அந்த போட்டியை மொத்தமாக ரத்து செய்தது.
9. இந்த விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் கருத்துச் சொல்வோருக்கு எதிராக எல்லாம் கொல்கத்தா போலீஸ் நடவடிக்கை எடுத்தது. பலருக்கு இந்த விவகாரத்தில் நோட்டீஸ் கூட அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தில் மம்தாவை குற்றஞ்சாட்டினால் விரலை உடைப்பேன் என்று திரிணாமுல் அமைச்சர் உதயன் குஹா சொன்னதும் சர்ச்சையானது.
10. கடைசியாக இந்தச் சம்பவத்தில் மம்தா நடத்திய போராட்டம் மிகப் பெரிய விமர்சனத்தைக் கிளப்பியது. மேற்கு வங்க முதல்வராக இருக்கும் மம்தா உரிய நடவடிக்கை எடுக்காமல் போராட்டம் என்று இந்தச் சம்பவத்தைத் திசைதிருப்ப முயல்வதாக உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் உட்பட பலரும் சாடினர்.