லண்டன் சிறைகள் நிரம்பி வழிகிறது ; இடம் தேடும் காவல்துறை.
பிரிட்டிஷ் அரசாங்கம், இம்மாதம் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனால் சிறைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் அவசரகால நடவடிக்கையாக காவல் நிலையங்களில் உள்ள சிறைகளைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்காலிக ஏற்பாடாக புதிய இடம் கிடைக்கும் வரை சந்தேக நபர்களை காவல்நிலைய சிறைகளில் அடைத்து வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
குடியேறிகள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 1,100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதால் சிறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் கியர் ஸ்டார்மர் திங்கட்கிழமை அன்று தெரிவித்தார்.
இதனால் முன்கூட்டியே சிறைக்கைதிகளை விடுவிக்க சிறைகளுக்கு அதிகாரம் அளிக்கப் போவதாக அமைச்சர்கள் கூறியிருந்தனர்.
புதிய தற்காலிக நடவடிக்கையாக சந்தேக நபர்களுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்படும். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஒன்றில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். அதுவரை அவர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவிருக்கின்றனர்.
சிறைகளில் இடமில்லாததால் சிரமமான, அவசியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்று சிறைத் துறை அமைச்சர் ஜேம்ஸ் டிம்ப்சன் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் பிரதமர் ஸ்டார்மர் அறிவித்த திட்டத்தின்படி சிறைக் காலத்தில் 40 விழுக்காட்டை நிறைவேற்றியவர்கள் விடுதலை செய்யலாம் என்பதால் பெரும்பாலான கைதிகள் இதற்குத் தகுதி பெறுகின்றனர். இந்த விழுக்காடு முன்பு 50ஆக இருந்தது.
திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தெற்கே இங்கிலாந்துச் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வட்டாரம்தான் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மூன்று சிறுமிகளைக் கொன்றவர்கள் இஸ்லாமிய குடியேறி என்ற வதந்தி பரவியதால் வன்முறை வெடித்தது.