அரியநேத்திரனுக்கு எவரும் வாக்களிக்கக் கூடாது! ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதே ஒரே வழி!! – கஜேந்திரன் கொதிப்பு.

“இந்தியா, இலங்கை அரசுகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும், தமிழர்களைத் தோற்கடிப்பதற்காகவுமே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா.அரியேத்திரன் களமிறங்கியுள்ளார். இவரின் இந்த முடிவு தமிழீழத் தேசியத் தலைவருக்கும், 50 ஆயிரம் மாவீரர்களுக்கும், விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இந்த மண்ணிலே வாழ்ந்து பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகவே மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் துண்டுப்பிரசுரம் வழங்கியது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கஜேந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதான பெரும்பான்மை வேட்பாளர்கள் மூவரும் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைத்து ஏமாற்று வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.

இந்திய, மேற்கு நாடுகளுடைய பின்னணியுடன் கடந்த 15 வருடங்களாக ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு அதற்குள்ளான 13 ஆவது திருத்தச் சட்டத்தைத் தீர்வாக வலியுறுத்தி வருகின்ற தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பேர்வையிலே தமிழர்களுடைய தேசிய அபிலாஷைகளைச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தப் போகின்றோம் என்ற ஒரு பேர்வையைப் போத்திக்கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியேத்திரனைத் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளன. இதனூடாக எங்களுடைய மக்களை ஏமாற்றி வாக்களிக்கச் செய்கின்ற உபாயத்தை அவர்கள் கையாண்டு வருகின்றனர்.

இலங்கையின் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டால்தான் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் உண்டு. எனவே, ஒரு பேரம் பேசுகின்ற வலிமைமிக்க சக்தியாக தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தை மாற்றுகின்ற முயற்சியிலே எமது கட்சித் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எம்.பி. தலைமையிலான வழிநடத்தலிலே இந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த பேரினவாத இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றியமைக்கப்பட வேண்டுமாக இருந்தால் இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதனூடாகத்தான் இந்தத் தீவிலே தமிழர்களும், முஸ்லிம்களும் பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க முடியும் என வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடம் வேண்டிக்கொள்கின்றோம்.

இந்தத் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற மாயைக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம். அரியநேத்திரன், இலங்கையை ஒரு பௌத்த நாடாக ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சியை ஆதரித்தவர். அவர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இலங்கையைச் சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொண்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தைத் தீர்வாக ஏற்றுக்கொள்ள அவரது மறைந்த தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் உடந்தையாகச் செயற்பட்டவர். அவருக்கு எவரும் வாக்களிக்கக்கூடாது. எனவே, ஒட்டுமொத்த தமிழ், முஸ்லிம்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.