கமலா ஹாரிசுக்கு ஆதரவு திரட்டிய ஒபாமா தம்பதியினர்.

இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிசுக்கு ஆதரவு வழங்குமாறு முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அவரது மனைவி மி‌ஷெல் ஒபாமாவும் மக்களைக் கேட்டுக்கொண்டு உற்சாகப்படுத்தியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் திருவாட்டி ஹாரிசுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் திரு ஒபாமாவும் திருவாட்டி மி‌ஷெல் ஒபாமாவும் ஈடுபட்டனர். அந்த வகையில் அவர்கள் வந்திருந்தோரை உற்சாகப்படுத்தினர்.

திரு ஒபாமா, அமெரிக்க அதிபர் பதவியை வகித்த முதல் கறுப்பினத்தவராவார். அதேபோல் திருவாட்டி ஹாரிஸ், அப்பொறுப்பை வகிக்கும் முதல் பெண் மட்டுமின்றி முதல் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

திரு ஒபாமா, திருவாட்டி ஹாரிசுக்குப் பேராதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும் சத்தமும் குழப்பமும் நமக்கு வேண்டாம். அத்தகைய ‘திரைப்படத்தை’ நாங்கள் இதற்கு முன்பு பார்த்துவிட்டோம். அத்தகைய படத்தின் ‘இரண்டாம் பாகம்’ பொதுவாக இன்னும் மோசமாகத்தான் இருக்கும்,” என்று சிகாகோ நகரில் இடம்பெற்று வரும் மாநாட்டின் இரண்டாம் நாளில் திரு ஒபாமா எடுத்துரைத்தார்.

“அமெரிக்கா புதிய அத்தியாயத்துக்குத் தயாராகிவிட்டது. புதிய கதைக்கு அமெரிக்கா ஆயத்தமாக உள்ளது. அதிபர் கமலா ஹாரிசுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார் திரு ஒபாமா.

தமக்குப் பிறகு அதிபர் பதவியை வகித்தவரும் இவ்வாண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவிருப்பவருமான குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்பை திரு ஒபாமா தாக்கிப் பேசினார். அதேவேளை, அவர் தற்போதைய அதிபர் ஜோ பைடனைப் பாராட்டினார்.

திரு பைடன், திரு ஒபாமா அதிபராக இருந்தபோது அவரின் துணை அதிபராகப் பொறுப்பு வகித்தார்.

“பேரபாயம் இருக்கும் வேளையில் ஜனநாயகத்தைத் தற்காத்த அதிபராக, வரலாறு திரு ஜோ பைடனை நினைவில் கொள்ளும். அவரை எமது அதிபர் என்றழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எமது நண்பர் என்றழைப்பதில் அதைவிடப் பெருமையடைகிறேன்,” என்றார் திரு ஒபாமா.

அதைத் தொடர்ந்து திரண்டிருந்தோர், “நாங்கள் பைடனை விரும்புகிறோம்,” என்று முழக்கமிட்டனர்.

“அமெரிக்கா, மீண்டும் எழுகிறது என நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்று திருவாட்டி மி‌ஷெல் ஒபாமா சொன்னார்.

Leave A Reply

Your email address will not be published.