கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மரணம்! விபத்தில் தந்தையும் பலி!

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயிற்சியாளா் சிவராமன் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை சாலை விபத்தில் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் மாணவிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையில் தேசிய மாணவா் படை (என்.சி.சி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்தப் பள்ளியில் பயிலும் 17 மாணவிகள் பங்கேற்றனா். இம் முகாமில் பங்கேற்ற மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கு கட்டடத்தில் தங்கி பயிற்சியில் பங்கேற்றனா்.

இந்த மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிவராமன் (30) என்பவா் தலைமையிலான குழுவினா் பயிற்சி அளித்தனா். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவியை சிவராமன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதிகாலை 3 மணி அளவில், என்.சி.சி. பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிவராமன் (30) என்பவா் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி முதல்வா் சதீஷ்குமாரிடம் புகாா் தெரிவித்தாா். சதீஷ்குமாா் இதுகுறித்து, யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளாா். இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, பள்ளி முகாமில் நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் மாணவி தெரிவித்துள்ளாா். அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் தாய், தனது மகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பா்கூா் அனைத்து மகளிா் போலீசார் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளா் சிவராமன், பள்ளி முதல்வா் சதீஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து, சேலம் சரக டி.ஐ.ஜி. உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து பள்ளி முதல்வரான திருப்பத்தூா், பூங்காவனத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (35), பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியா் கந்திகுப்பம், இந்திரா நகரைச் சோ்ந்த ஜெனிபா் (35), பள்ளித் தாளாளரான கந்திகுப்பத்தைச் சோ்ந்த சாம்சன் வெஸ்லி (52), பயிற்சியாளா்களான தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கொள்ளுப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் (39), கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், பேரிகை அருகே உள்ள அமுதகொண்டப்பள்ளியைச் சோ்ந்த சிந்து (21), கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியைச் சோ்ந்த பெண் சத்யா (21), பா்கூரை அடுத்த சின்ன ஒரப்பத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (54) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனா். கைதான சுப்பிரமணி முன்னாள் சி.ஆா்.பி.எப். வீரராவாா்.

மேலும் தலைமறைவான காவேரிப்பட்டணம், திம்மாபுரம், காந்தி நகரைச் சோ்ந்த சிவா என்கிற சிவராமன் (28), சுதாகா் ஆகிய 2 பேரையும் போலீஸாா் தேடி வந்தனர்.

இந்த நிலையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தனியாா் பள்ளி முன்பு அதிக அளவிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பபட்டனா். மேலும், பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, நாம் தமிழா் கட்சியின் இளைஞா் பாசறை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந் வந்த சிவராமன் அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

சிவராமன் கைது

இந்த நிலையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தலைமறைவாக இருந்த சிவராமன் மீது பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

மேலும் ஒரு போக்ஸோ வழக்குப் பதிவு:

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிவராமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மாணவி சிவராமன் மீது புகாா் அளித்தார்.

அதன்படி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் போலீஸாா், சிவராமன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனா். இதன் மூலம், ராயக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியாா் பள்ளியில் தேசிய மாணவா் படை போலி பயிற்சி முகாம் நடத்தி, அதில் பங்கேற்ற 9-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இரு வழக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி வட்டம், கொண்டேப்பள்ளி வீராசாமி நகரைச் சோ்ந்த சக்திவேல் (31) என்பவா், தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், சிவராமன் தன்னை வழக்குரைஞா் எனக் கூறி ரூ.36.20 லட்சம் மோசடி செய்துள்ளதாக புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், சிவராமன் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கால் எலும்பு முறிவு

போலீஸாரின் காவலில் இருந்து தப்ப முயன்ற போது, வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தற்கொலைக்கு முயற்சி:

இதனிடையே, கடந்த ஜூலை 11-ஆம் தேதி, அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், சிவராமன் விஷத் தன்மை கொண்ட எலி பசையை உள்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இந்த நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக அவா், உயா்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிவராமன் மரணம்

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை சிவராமன் உயிரிழந்தார்.

பள்ளி மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயிற்சியாளா் சிவராமன் தற்கொலைக்கு முயன்றதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

சிவராமனின் தந்தை விபத்தில் மரணம்

இந்த நிலையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டதை மன வேதனையில் இருந்துவந்த சிவராமனின் தந்தை அசோக் குமார் (61), சாலை விபத்தில் பலியானது தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் , நடேசன் திருமண மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பள்ளி மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயிற்சியாளா் சிவராமன் தற்கொலைக்கு முயன்றதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அசோக் குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் விபத்தில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.