கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமிகள் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

உத்தரப் பிரதேசத்தில் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிக்கு சென்ற இரு சிறுமிகள் மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையினர் தற்கொலை என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும், இது கொலை என்றும் சிறுமிகளின் பெற்றோர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவை காண்பதற்காக 15 வயது சிறுமி மற்றும் 18 வயது இளம்பெண் இருவர் சென்றுள்ளனர்.

ஆனால், இரவு வெகுநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர்களும் கிராமத்தினரும் தேடியுள்ளனர்.

இந்த நிலையில், கிராமத்துக்கு சிறிது தொலைவில் உள்ள மாமரத்தில் இருவரும் துப்பாட்டாவால் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலோக் ப்ரியதர்ஷி கூறுகையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது, சம்பவ இடத்தில் இருந்து ஒரு செல்போனும், ஒரு சிம் கார்டும் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

சிறுமிகள் இருவரும் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் இது கொலைதான் என்றும் பெற்றோர்களும் ஊர்மக்களும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்களா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்.

கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு சென்ற சிறுமிகள் இருவரும் மரத்தில் தூக்கிலிட்டபடி சடலமாக மீட்கப்பட்டுள்ள அந்த ஊர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.