பாலியல் புகார்; நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு.

கேரள மாநிலத்தில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. அதன் தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர், இயக்குநர், கேரள மாநில சலசித்ரா அகாடமி தலைவருமான ரஞ்சித் பாலியல் முறைகேடு புகார்களில் சிக்கினார்.

அதன் பின்னர் மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த நடிகர் சித்திக் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சித்திக் மீது நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதையடுத்து தமது பதவியில் இருந்து விலகினார் சித்திக்.

இதற்கிடையே நடிகை ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் பேரில் கேரள காவல்துறையினர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் நடிகை மினு முனீர், நடிகரும் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவுமான முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேல பாபு ஆகியோர் மீதும் பாலியல் புகார் அளித்திருக்கிறார். இதனால் பல பாலியல் புகார்கள் வெளிவரக்கூடும் என்று கூறப்படுகிறது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக மலையாள ஊடகங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், நடிகைகள் கொடுக்கும் ஒவ்வொரு புகாரையும் விசாரிக்கத் தனிக் குழு நியமிக்கப்படும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் ஐஜி ஜி.ஸ்பர்ஜன் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவானதைத் தொடர்ந்து மோகன்லால் உள்பட பல மலையாள நட்சத்திரங்கள், மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து விலகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.