கிளப் வசந்த கொலையில் சம்பந்தப்பட்ட இருவர் பின்னவத்தையில் கைது.
கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்படாத துப்பாக்கிதாரி மற்றும் மற்றுமொருவர் இன்று (28) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலி நாகொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் தங்கியிருப்பதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் சன்ன அமரசேகர உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று பின்வத்தை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போதே இவர்கள் இருவரையும் கைதாகியுள்ளனர். .
துப்பாக்கிச் சூட்டின் பின்னர் சந்தேகநபர்கள் காரில் இருந்து வேனுக்கு மாறி, அங்கிருந்து மாத்தறைக்கு தெற்கு அதிவேக வீதியூடாக கடவத்தை நோக்கி பயணித்துள்ளதாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
05 நாட்களுக்கு முன்னர், கடந்த 23 ஆம் திகதி, கிளப் வசந்த கொலையின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான 31 வயதான பெட்டி அரம்பகே அஜித் ரோஹன, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌடான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். அந்த நபர் ராணுவத்தில் இருந்து தப்பியோடியவராவார்.
நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அதுருகிரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சன்ன அமரசேகர , பொலிஸ் பரிசோதகர் திலகரத்ன, சார்ஜன்ட் லால் (18397), கான்ஸ்டபிள் வருண்வன நாலக (76003), அமரஜீவ (8010), புஷ்பகுமார (82409) மற்றும் போகோரி கசுன் (80452) ஆகியோர் சுற்றி வளைப்பில் செயல்பட்டனர்.