பாலியல் புகார்கள்: நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு.

அடுத்தடுத்து பதிவாகும் பாலியல் புகார்களால் கேரள திரையுலகம் ஆட்டங்கண்டுள்ளது.

மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரில் நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் முகே‌ஷ் கொல்லம் வட்டாரத்தின் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாள நடிகர் இடவேலா பாபு என்பவர் மீதும் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த நடிகர் சித்திக் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சித்திக் மீது நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதையடுத்து தமது பதவியில் இருந்து விலகினார் சித்திக்.

ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் பேரில் கேரள காவல்துறையினர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். 2016ஆம் ஆண்டு திருவனந்தபுரம் மங்கட் ஓட்டலில் சித்திக் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரேவதி சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சித்திக் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்பிணை பெற முயன்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், மணியன் பிள்ளைராஜு, பாபுராஜ், பிரபல இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்பட 19 பேர் மீது புகார் வந்துள்ளதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவானதைத் தொடர்ந்து மோகன்லால் உள்பட பல மலையாள நட்சத்திரங்கள், மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து விலகியுள்ளனர்.

ஹேமா விசாரணை குழுவின் அறிக்கை
மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. அதன் தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் குண்டர் கும்பல் தலையீடு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

குஷ்பு கண்டனம்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தாயாக தான் துணை நிற்பதாக கூறியுள்ளார் நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு.

இது போன்ற பிரச்சினைகளை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். ஆனால் அதை பெரும்பான்மையான அளவில் சுமப்பது பெண்கள்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.