முதலீடுகளை ஈர்க்கும் முதல்வர்: ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீடு!
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இவற்றின் மூலம் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி வசதிகளை இந்த நிறுவனங்கள் மேம்படுத்தும்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கும் எட்டப்படும்.
சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அந்த வகையில், நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழில் தொடங்க அந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இதுபற்றித் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில், “சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் ரூ. 900 கோடிக்கும் அதிகமான முதலீடுகளில் 4,100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
நோக்கியா நிறுவனத்தில் ரூ. 450 கோடியில் 100 வேலை வாய்ப்புகளும் பேபால் நிறுவனத்தில் 1,000 வேலை வாய்ப்புகளும் மைக்ரோசிப் நிறுவனத்தில் ரூ. 250 கோடியில் 1,500 வேலைவாய்ப்புகளும் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தில் ரூ. 50 கோடியில் 700 வேலைகளும் அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தில் 500 வேலைகளும் உருவாக்கப்படவுள்ளன.
சுற்றுப் பயணம் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், தொடர்ந்து முனைந்து, அதிக முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.