பாலியல் புகார்கள் குறித்து மெளனம் கலைத்த மோகன்லால், மம்முட்டி

மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. அதன் தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராகப் பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மோகன்லால், மம்முட்டி இவ்விவகாரம் தொடர்பாக மெளனம் கலைத்துள்ளனர்.

“நான் எங்கும் ஓடிப்போகவில்லை. மலையாளத் திரையுலகை அழித்துவிடாதீர்கள். குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும், அதே சமயம் நம் திரையுலகம் பாதுகாக்கப்பட வேண்டும்,” என நடிகரும் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

“கேரள திரைத்துறையில் எந்த ஆதிக்க குழுவும் இல்லை, ஹேமா குழுவின் அறிக்கையை வரவேற்கிறேன். அதன் பரிந்துரையை செயல்படுத்த அனைத்து அமைப்புகளும் வேறுபாடு இன்றி ஒற்றுமையாக நிற்க வேண்டிய நேரம் இது,” என்று மம்முட்டி தெரிவித்துள்ளார்.

முகேஷ் பதவி விலகமாட்டார்
இதற்கிடையே,மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரில், நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் முகே‌ஷ் கொல்லம் வட்டாரத்தின் எம்எல்ஏ ஆவார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.

முகேஷ் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தனது எம்.எல்.ஏ. பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், எம்எல்ஏ பதவியில் இருந்து முகேஷ் விலகத் தேவையில்லை என்று கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.

“பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் திரைப்படத் தயாரிப்பு கொள்கைக்குழுவில் இருந்து முகேஷ் நீக்கப்பட்டுள்ளார். அதேவேளை, எம்எல்ஏ பதவியை முகேஷ் ராஜினாமா செய்யத் தேவையில்லை. நாட்டில் மொத்தம் 16 எம்பிக்கள், 135 எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் யாரும் பதவி விலகவில்லை” என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஜெயசூர்யா மறுப்பு
இந்நிலையில் தம்மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களை நடிகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார்.

“நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும். என் மீதான புகார்களை சட்ட ரீதியாக தொடர முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பான மீதமுள்ள நடவடிக்கைகளை எனது வழக்கறிஞர் குழு கவனித்துக்கொள்ளும்,” என்று ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.