ஜனாதிபதி வேட்பாளரை இலக்கு வைத்து தாக்கும் திட்டம் குறித்து விரிவான விசாரணை!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலம் வாய்ந்த வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் மிகவும் இரகசியமான அறிக்கையொன்றை பிரதான நீதவான் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பி அறிக்கை இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்பட வேண்டுமெனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியுள்ளது. தாக்குதல் திட்டத்தை வெளிப்படுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கிய நபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு பிரதம நீதவான் பணிப்புரை விடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.