நான் எங்கும் ஓடவில்லை: மௌனம் கலைத்த மோகன்லால்.
“நான் எங்கும் ஓடிப்போகவில்லை,” என்று அம்மா அமைப்பின் முன்னாள் தலைவரான மோகன்லால் தெரிவித்துள்ளார்.
மலையாளத் திரையுலகில் நிகழும் பாலியல் சுரண்டல்கள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின், நடிகர் சங்கமான ‘அம்மா’ சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் விலகினார். அவருடன் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகினார். இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ‘கேரளா கிரிக்கெட் லீக்’ நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், “நான் எங்கும் ஓடிப்போகவில்லை. எனது தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நான் கேரளாவில் இல்லை. என் மனைவியின் அறுவை சிகிச்சை காரணமாக, நான் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. நாங்கள் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறோம். இந்த அறிக்கையை அரசு வெளியிட்டது சரியான முடிவு.
‘அம்மா’ சங்கம் என்பது ஒரு தொழிற்சங்கம் அல்ல. அது ஒரு குடும்பம் போன்றது. சங்கத்துக்கு எதிரான கருத்துகள் வருத்தமளிக்கின்றன. ‘அம்மா’ அமைப்பே எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. இந்தக் கேள்விகள் அனைவரிடமும் கேட்கப்பட வேண்டியவை.
இந்த சர்ச்சையின் விளைவாக முழு திரையுலகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம், சமமான அணுகுமுறையை மேற்கொள்ள ஊடகத்தினரை கேட்டுக் கொள்கிறேன். கலைஞர்களாகிய நாங்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உருவாக்கிய திரையுலகை அழிக்க முயற்சிக்காதீர்கள். திரையுலகில் இருக்கும் பிரச்சினைகளை களைந்து முறையான தீர்வு காண நாம் அனைவரும் ஒருங்கிணைவோம்,” என்றார்.