20 ஆண்டுகளாக மாதவிடாய் குறைபாட்டுடன் பெரும் அவதிப்பட்டு வந்தேன் : பாடகி நேஹா.
நான் வலிமையானவள் என்பதை உணர்ந்த அற்புத தருணம் இது , கடந்த இருபது ஆண்டுகளாக மாதவிடாய் குறைபாட்டுடன் பெரும் அவதிப்பட்டு வந்ததாகக் கூறியுள்ளார் பிரபல இந்திப் பின்னணிப் பாடகி நேஹா காபஷின்.
இவர் தமிழிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டி இந்தித் திரை உலகத்தினரையும் ரசிகர்களையும் அதிர வைத்துள்ளது.
“மாதவிடாயுடன் தொடர்புள்ள குறைபாடுகளால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதே இதுநாள் வரை எனக்குத் தெரியாது. இருபது ஆண்டுகளுக்கு பிறகுதான் என்ன பாதிப்பு என்பதே கண்டு பிடிக்க முடிந்தது. அதுவரை ஏதும் தெரியாமல் வலம் வந்துள்ளேன்.
“மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல், மன ரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொண்டேன். கடுமையான உடல் வலி, மனச்சோர்வு, பதற்றம், அழுகை, இரைப்பை பிரச்சனை, தசைபிடிப்பு, மயக்கம் என நான் அனுபவித்த பாதிப்புகளின் பட்டியல் இன்னும் நீளமானது. இவற்றுடன்தான் நான் பாடகியாக, பாலாசிரியராக கலை ஆர்வம் உள்ள பெண்ணாக இயங்கி வந்தேன் என்கிறார் நேஹா.
இந்நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் பாடுவதற்காக தேடி வந்த வாய்ப்புகளை இவரால் ஏற்கமுடியவில்லையாம். ஒரு கட்டத்தில் எந்த வாய்ப்பையும் ஏற்க முடியாத நிலை ஏற்படுமோ என்று பயந்தாராம். அதன் பிறகே தனது நிலை மோசமாவதாக பயந்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தனக்குள்ள குறைபாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு சிகிச்சை பெற்றுள்ளார். அதற்காக உட்கொண்ட மருந்து மாத்திரைகளால் இவரது உடல் எடை கூடிப்போனது.
“பலரும் இதை என் உடல் வாகை என கேலி செய்தனர். ஆனால் எனக்கான பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வந்தேன். ஒரு கட்டத்தில் நான் வலிமையானவள் என்பதை உணர்ந்தேன். அது அற்புதமான தருணம். மண வாழ்க்கையும் நல்லவிதமாக அமைந்ததால் மீண்டும் எனது பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன்.
’சத்தம் போடாதே’ படத்தில் என்னை அறிமுகப்படுத்திய யுவன்சங்கர் ராஜா மீண்டும் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். தேவிஸ்ரீபிராத், டி.இமாம் ஆகியோரது இசையிலும் பாட இருக்கிறேன்.
உலக அளவில் மிகப்பெரிய இசை கச்சேரி ஒன்றை அடுத்த ஆண்டு நடத்த உள்ளேன். மேலும் பஞ்சாபி நாட்டுப்புற பாடல்கள் மீதான ஆர்வம் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசைத்தொகுப்பு ஒன்றை தயார் செய்து வருகிறேன் என்கிறார் நேகா.