விக்கிரவாண்டியில் விஜய்யின் தவெக மாநாடு நடத்த காவல்துறை அனுமதி

நடிகர் விஜய் அரசியலுக்கு தான் வரப்போவதாக அறிவித்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காணவிருப்பதாக அறிவித்தார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி, கட்சியின் கொடியை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். மேலும் தவெக கட்சியின் முதல் மாநாடு வரும் 23ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடிதம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறையினர் அந்த இடத்தை நேரில் சென்றும் பார்வையிட்டனர். இந்த நிலையில் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் மற்றும் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதற்கான வழி, வாகனங்கள் வந்து செல்லும் வழி, வாகன நிறுத்துமிடம், உணவு, கழிவறை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் எழுப்பி விக்கிரவாண்டி காவல்துறையினர் தவெக கட்சியினருக்கு கடந்த 2ம் தேதி கடிதம் வழங்கினர்.

விழுப்புரம் காவல்துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கு உரிய பதில்கள் உடன் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை வெக பொதுச்செயலாளர் தன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று விழுப்புரம் காவல் துணை கண்கானிப்பாளர் சுரேஷிடம் நேரில் வழங்கினார். இதையடுத்து விக்ரவாண்டியில் விஜய்யின் தவெக கட்சி மாநாடு நடத்த காவல்துறை இன்று அனுமதி வழங்கி உள்ளது.

இதனுடைய இன்று காலை 11 மணிக்கு வீடியோ மூலம் கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் தவெக கட்சி வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது குறித்து விஜய் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள மாநாட்டின் தேதியையும் விஜய் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.