தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த குழுவினரை யாழ். தனியார் விடுதியில் சந்தித்த ரணில்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இந்தச் சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான மயூரன், சுதர்சன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் மற்றும் அகிலன் முத்துக்குமாரசாமி, குணாளன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பில் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் விரிவான பேச்சில் ஈடுபட்டதாகவும், விசேடமாக சாவகச்சேரியைத் தனியான பிரதேச செயலக பிரிவாகப் பிரிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருந்ததாகவும் சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த நிலையில் அக்கட்சியின் குழுவினர் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பும் நேற்று இரவு மாவையின் இல்லத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.