தென்பகுதி வேட்பாளர்களுக்கு நாம் அளிக்கும் வாக்கு எமது தலையில் நாமே மண் அள்ளிப் போடும் செயல்! – தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தெரிவிப்பு.

ஜனாதிபதித் தேர்தலில் தென்பகுதி வேட்பாளர்களுக்கு நாம் அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளிப்போடும் செயல் என்று தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இரவு தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இன்று பரவலாகப் பேசப்படுகின்ற மூன்று தென் பகுதி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நாம் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளிக் கொட்டுவதற்குச் சமமாகவே இருக்கும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

இதில் சஜித் பிரேமதாஸ ஆயிரம் பன்சாலைகளைக் கட்டுவதாகத் தெரிவித்திருக்கின்றார். இந்தநிலையில் யாரோ ஒரு கட்சி கூறுகின்றது என்பதற்காக நீங்கள் அவருக்கு அளிக்கின்ற வாக்கானது பன்சாலைகளுக்கு வைக்கின்ற ஒவ்வொரு கல்லாகத்தான் இருக்கும்.

அதேபோல், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கானது இருக்கின்ற நிலங்களை இன்னும் இழந்து செல்வதாகவே அமையும். ஒரு கட்டமைப்பாக ஒரு தேசமாக ஓர் இனத்தின் விடுதலைக்காக இருந்த எம்மைச் சிதைத்த பெருமை ரணிலைத்தான் சாரும்.

அதேபோல் அநுரகுமார திஸாநாயக்க எமது இணைந்த வடக்கு – கிழக்கைப் பிரித்தவராக இருக்கின்றார். இவ்வாறானவர்களைத் தென்பகுதியில் இருந்து அழைத்து வந்து மாலை போட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்கின்ற ஒரு வெட்கம் கெட்ட சமூகமாக நாம் மாறி வருகின்றோம்.

ஆகவே, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தியைச் சொல்வதற்காகவே நான் வந்திருக்கின்றேனே தவிர, ஒரு ஜனாதிபதியாக வருவதற்கு அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அந்தக் கதிரையைத் தட்டிப் பறிப்பதற்காக இல்லை.

ஈழ மண்ணில் இழந்த உரிமைகளை மீட்பதற்காக நாங்கள் நாங்களாகவே இருக்கின்றோம் என்ற தகவலை சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் தென்னிலங்கைக்கும், நாட்டில் ஒன்பதாவது ஜனாதிபதியாக வர இருக்கின்றவருக்கும் நாங்கள் கொடுக்க இருக்கின்றோம்.

எங்களுடைய வடக்கு – கிழக்கில் ஓர் இனமாக – ஒரு தேசமாக ஒன்றிணைந்த கட்டமைப்புக்குள் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைப் பெறுவதற்காக எங்களுடைய இனம் ஒன்றிணைந்து தனது ஆதரவைத் தெரிவிக்கின்றது என்கின்ற ஒரு செய்தியை நாங்கள் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

இந்தப் 13 நாட்களுக்குப் பல போலியான செய்திகள் என்னைப் பற்றி வரலாம். எதிர்வரும் 20ஆம் திகதி கூட அரியநேத்திரன் இவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றார், அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றார் என்ற செய்தி கூட சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளிவரலாம். ஆனால், நான் எந்தவிதமான மாற்றத்துக்கும் உட்படப் போவதில்லை.

ஆகவே, எதிர்வரும் 21ஆம் திகதி நீங்கள் போடுகின்ற புள்ளடியானது எமது இனத்துக்கான புள்ளடி, எமது விடுதலைக்கான புள்ளடி, எமது மண் மீட்புக்கான புள்ளடி என்பதை உணர்ந்து செயற்படுங்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.