செய் நன்றி மறவாத சமூகம் என்பதால் மலையக மக்களின் ஆதரவு ரணிலுக்கே – இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கூறுகின்றார்.
“மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்குப் பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.” – என்று இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
ஹப்புத்தளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“இதுவரையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நவக்கிரகங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாகத் திரும்பி நின்றோம். இன்று அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முடிந்திருக்கிறது.
மலையக மக்கள் காணியின்றி தவித்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்ட திட்டங்களை ஜனாதிபதி தயாரித்திருக்கின்றார்.
அதனால் மலையக மக்களுக்கு வீட்டு உரிமையும் காணி உரிமையும் கிடைக்கப்போகும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த பொருளாதார நெருக்கடியால் சகல மக்களும் கஷ்டப்பட்டனர்.
இன்று 38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமே கல்விப் புலமையும், வலுவான சர்வதேச தொடர்புகளும் உள்ளன. அதேபோல் நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் அவருக்கு அசுர பலம் கிடைத்திருக்கின்றது.
எனவே, மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்குப் பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இன்று ரணிலைத் தவிர்த்து 37 பேருக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை வந்திருக்கின்றது. நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தபோது அவர்களுக்கு அந்த ஆசை ஏன் வரவில்லை.?
அன்று நாட்டை ஏற்றிருந்தால் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் மட்டும்தான் அவர்களிடம் இருந்தனர்.
அதனால் அன்று நாட்டைக் காக்க திராணியற்றவர்கள் இன்று சுயநலமாக நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். சிலிண்டர் சின்னம் வாக்குச்சீட்டில் கடையிலிருந்து மூன்றாவதாகக் காணப்படுவதால் இலகுவாக அடையாளம் கண்டு புள்ளடியிடுவது சுலபமானது.” – என்றார்.