ஓடுபாதையை விட்டு சறுக்கிய விமானம்
கிழக்கு இந்தோனீசியாவில் உள்ள பாப்புவா வட்டாரத்தில் 48 பேர் கொண்ட விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து சறுக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தச் சம்பவத்தில் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
பாப்புவா, மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. அடிக்கடி ஏற்படும் மோசமான வானிலை காரணமாக அங்கு விமானங்கள் பறப்பதற்கு இடையூறுகள் ஏற்படுவதுண்டு.
‘டிரிகானா ஏர்’ நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஏடிஆர்-42 வகை விமானம் ஜெயபூரா பகுதிக்குச் செல்ல, யாப்பென் தீவுகளில் உள்ள விமான நிலையத்திலிருந்து திங்கட்கிழமை (செப்டம்பர் 9) காலை புறப்பட்டபோது ஓடுபாதையிலிருந்து சறுக்கியது.
அந்த விமானத்தில் ஒரு கைக்குழந்தை உட்பட 42 பயணிகளும் ஆறு ஊழியர்களும் இருந்தனர்.
“அனைவரும் உயிர் பிழைத்தனர். அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்,” என்று உள்ளூர் காவல்துறைத் தலைவர் ஆர்டியன் உக்கி ஹெர்சாயோ அறிக்கை ஒன்றில் கூறினார்.
“நாங்கள் சம்பவத்தை விசாரித்து வருகிறோம். இத்தகைய சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்றார் அவர்.
சில பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் சம்பவத்தால் அவர்கள் நிலைகுலைந்து போயிருப்பதாகவும் உள்ளூர் தேடல், மீட்பு அமைப்பு, அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்தோனீசியா தனது ஆயிரக்கணக்கான தீவுகளை இணைக்க அதிக அளவில் ஆகாயப் போக்குவரத்தை சார்ந்திருக்கிறது. இருப்பினும், பாப்புவா சென்றடைவதற்கு மிகச் சிரமமான இடம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டில் பாப்புவாவில் ‘டிரிகானா ஏர்’ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 54 பேரும் உயிரிழந்தனர்.