ஹாரிசுக்கும் டிரம்ப்புக்கும்இடையே கடும் போட்டி: கருத்துக்கணிப்பு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் துணை அதிபர் கமலா ஹாரிசும் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு இடையிலான விவாதம் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், திருவாட்டி ஹாரிசைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியிருப்பதாகச் சில வாக்காளர்கள் கூறியுள்ளனர்.
நியூயார்க் டைம்சும் சியென்னா கல்லூரியும் நடத்திய தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு ஒன்றில், டோனல்ட் டிரம்ப் 48 விழுக்காட்டு வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார். திருவாட்டி ஹாரிஸ் 47 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.
டிரம்ப்புக்கான ஆதரவு தொடர்வதை அந்தக் கருத்துக்கணிப்பு காட்டுகிறது. அதிபர் தேர்தலுக்கான முடிவுகளை நிர்ணயிக்கும் ஏழு முக்கிய மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகளோடு தேசிய கருத்துக்கணிப்பின் முடிவுகளும் ஒத்துப்போகின்றன.
அவற்றில் திருவாட்டி ஹாரிசுக்கும் டிரம்ப்புக்கும் ஒரே வாக்குகள் அல்லது திருவாட்டி ஹாரிஸ் சற்று முன்னிலையில் இருப்பதாக ‘டைம்ஸ்’ கருத்துக்கணிப்புகளின் சராசரி முடிவுகள் காட்டுகின்றன. ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், அவர்களில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் அல்லது தோல்வியுறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஏறக்குறைய எட்டு வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. டிரம்ப் மீதான கருத்துகள் பேரளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், திருவாட்டி ஹாரிசைப் பற்றி பலரும் இன்னும் அறிந்திருக்கவில்லை.
அந்த வகையில், புதிய கருத்துக்கணிப்பில் 28 விழுக்காட்டினர் திருவாட்டி ஹாரிசைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினர். டிரம்ப்பைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று 9 விழுக்காட்டினர் மட்டுமே குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.