இந்தியாவிடமிருந்து 65 மில்லியன் டொலர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு…
யாழ் சர்வதேச விமான நிலையம் மற்றும் தீவுகளில் உள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு பணம் வழங்கிய இந்தியாவிடமிருந்து 65 மில்லியன் டொலர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இந்தியா வழங்கவுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தின் விரிவாக்கம் மற்றும் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் நேற்று முன்தினம் (8) அறிவித்துள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தின் விரிவாக்கம் மற்றும் அபிவிருத்தியின் ஊடாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை துரிதமாக அபிவிருத்தி செய்ய இந்தியா எதிர்பார்ப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கத் திட்டமானது இந்தியாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் பெரிய அளவிலான கப்பல்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வரவழைத்து பெரிய கொள்ளளவு கொண்ட சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு உதவும் என்றும் இந்தியா கூறியுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், யாழ் தீவுகளில் காற்றாலைகள், ரயில் போக்குவரத்து போன்ற துறைகளில் இந்தியா நிதி உதவி மற்றும் முதலீடுகளை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது இந்தியா எடுத்த இந்தத் தீர்மானத்தை உறுதிப்படுத்தினார்.