சஜித்தையோ அநுரவையோ நம்பாதீர்கள்! – கிளிநொச்சியில் ரணில் தெரிவிப்பு.
“சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க வேண்டும்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
“அண்மைய பொருளாதார வீழ்ச்சியை அடுத்து மக்கள் படும் துன்பத்தைப் போக்க சஜித்தோ அல்லது அநுரவோ முன்வரவில்லை.
நான் உலகெங்கிலும் உள்ள அரச தலைவர்களைச் சந்தித்து உரம், எரிபொருள் கேட்ட போது சஜித்தும் அநுரவும் தேர்தல் நடத்துமாறு கோரினர். மக்களின் வலிக்கு மத்தியில் தேர்தல் நடத்துமாறு கோரியும், வேலைநிறுத்தம் நடத்தியும் நாட்டைச் சீர்குலைக்க முயன்ற தலைவர்களை நம்ப முடியாது.
எனவே, சிரமப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தி அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
கஷ்டங்களில் இருந்து மீண்டு மக்கள் சுமுகமாக வாழ வழி செய்ய வேண்டுமெனக் கருதியே ஆட்சியை ஏற்றுக்கொண்டேன். அநுரவோ, சஜித்தோ அரசை ஏற்க முன்வரவில்லை. மக்களின் வயிற்றுப்பசியைப் போக்கவோ, தட்டுப்பாடுகளை நிவர்த்திக்கவோ, பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்தவோ அவர்கள் முன்வரவில்லை.
மக்கள் கஷ்டப்படுவதை அவர்கள் வேடிக்கை பார்த்தனர். கஷ்டத்தை போக்க உதவி செய்ய வருமாறு அவர்களிடம் கோரினேன். அதையும் அவர்கள் மறுத்துவிட்டனர். மக்கள் தட்டுப்பாடுகளுடன் தவித்தபோது அவர்களுக்குத் தேர்தல் தேவைப்பட்டது. தேர்தல் நடத்தியிருந்தால் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்திருக்குமா? அவர்கள் தேர்தலுக்குப் பணத்தைச் செலவிடச் சொன்னார்கள். அவர்களை என்னோடு இணையுமாறு அழைத்தேன் வரவில்லை. மக்கள் கஷ்டத்தில் அரசியல் இலாபம் தேடினார்கள்.
நான் தட்டுப்பாடுகளை நிவர்த்திக்க வழி செய்தேன். அதனால் தொழில்களை மீள ஆரம்பிக்க முடிந்தது. எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் மக்களை வாழவைக்கும் முயற்சிகளை எடுத்தோம். அன்று பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. நான் ரூபாவை பலப்படுத்தி விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கினேன்.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது. ஆனால், பிரச்சினைகள் இன்னும் உள்ளன. மக்களுக்கு சுமைகள் உள்ளன. அவற்றைக் குறைக்க வழி செய்வோம். இன்று சுமுகமான சூழலை உருவாக்கியிருக்கின்றோம். ஐ.எம்.எப். மற்றும் 18 நாடுகளின் கடன் உதவிகள் கிடைக்கவுள்ளன. அதனை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும். அடுத்த ஐந்து வருடங்களில் அதற்கு வழி செய்வேன். அதற்காகவே மக்கள் ஆணை கேட்கின்றேன்.
பொருளாதாரத்தை நிலைப்படுத்தியிருந்தாலும். அது முழுமையாக உறுதியாகவில்லை. அதற்காகவே இயலும் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றேன். ஐந்து அம்சங்களை உள்ளடக்கி அந்தத் திட்டத்தை தயாரித்திருக்கின்றோம்.
ரூபாவை வலுவடையச் செய்வதே மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சிறந்த வழியாகும். மக்கள் தாங்கிக்கொள்ள கூடிய அளவு பொருட்களின் விலையை குறைக்கலாம். பணம் அச்சிட்டால் அது நடக்காது. அதிகளவில் கடன் பெற்றாலும் அதே நிலையே ஏற்படும். நாம் கடன் பெறுவதை நிறுத்தியுள்ளோம்.
அதனால்தான் வருமானத்தை மேம்படுத்த வற் வரியை அதிகரித்து ரூபாவைப் பலப்படுத்தினோம். இப்போது வௌிநாட்டு வருமானத்தை ஈட்ட வேண்டியுள்ளது. இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் இல்லாமையால் கடன் பெற வேண்டியுள்ளது. எனவே, ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.
நவீன விவசாய முறைமைகளுக்குச் செல்ல மக்களுக்கு உதவிகளை வழங்குவோம். மரக்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விநியோகிக்க தனியாருடன் இணைந்து சந்தைப்படுத்தல் திட்டங்களை அறிமுகப்படுத்துவோம்.
நெல் விளைச்சலையும் பலப்படுத்துவோம். உலக சனத்தொகை அதிகரித்து வரும் வேளையில் உணவு உற்பத்தியை அதிகப்படுத்தி நாமும் வலுடைய வேண்டும். இதனால் கிராமங்களில் வறுமை மறையும். இந்த பகுதிகளை இலங்கையின் மிகச்சிறந்த விவசாய மையமாக மாற்றுவோம். எமக்கு உதவ மக்கள் முன்வர வேண்டும்.
அதற்காகவே பலாலி சர்வதேச விமான நிலையை மேம்படுத்தினோம். பரந்தன், காங்கேசன்துறை, மாங்குளத்தில் முதலீட்டு வலயங்களை அமைப்போம். சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்வோம். இந்தியாவுக்கு அதனை விற்பனை செய்யவும் முடியும். அதனால் பலருடைய வாழ்க்கை செழிப்படையும். டிஜிட்டல் பொருளாதார உருவாக்கப்படும். கிளிநொச்சி பொறியியல் பீடத்தை சுற்றிலும் அமைந்துள்ள பகுதிகளை மேம்படு்த்துவோம்.
என்னுடைய எதிர்காலத்தைப் பற்றியோ சஜித்துடையதோ அநுரவுடையதோ எதிர்காலத்தைப பற்றியோ சிந்திக்காமல் தத்தமது எதிர்காலத்தையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிந்தித்துத் தீர்மானியுங்கள்.
அதைப் பற்றி சிந்தித்து சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தவறினால் சிலிண்டரும் இருக்காது. எதிர்காலமும் இருக்காது.” – என்றார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஆகியோரும் இதன்போது உரையாற்றினார்கள்.