மதுபோதையில் மாணவர்களைத் தாக்கிய பாடகர் மனோவின் மகன்களைத் தேடும் காவல்துறை.

மாணவர்களைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் பாடகர் மனோவின் மகன்களான ரஃபிக் (35), சாஹிர் (38) அவர்களின் நண்பர்களான விக்னேஷ், தர்மா ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

காயமடைந்த மாணவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கிருபாகரன் (20), அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதுச் சிறுவன் இருவரும் புதன்கிழமை (செப்டம்பர் 11) அதிகாலையில் வளசரவாக்கம் பகுதியிலுள்ள உள்ள காற்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்துவிட்டு பாடகர் மனோ வீட்டின் வழியே சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது மதுபோதையில் இருந்த பாடகர் மனோவின் மகன்களும் அவர்களின் நண்பர்களும் சேர்ந்து, எதற்காக இங்கு நிற்கின்றீர்கள்?” என கேட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், நால்வரும் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர். கிருபாகரனுக்கு பின்னந்தலையில் 3 தையல் போடப்பட்டுள்ளது. மற்ற மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

நால்வரும் இரு மாணவர்களை ஆபாசமாகப் பேசி கட்டையால் தாக்க முற்படுவதும், பின்னர் கைகளால் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து காணொளி காட்சிப்பதிவுகள் அடிப்படையில் தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷ் (28), தர்மா (23) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக இருந்து வரும் மனோவின் மகன்களான ரஃபிக், சாஹிர் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள மனோவின் வீட்டில் காவல்துறையினர் சென்று விசாரணை செய்ததாகவும் அப்போது அவருடைய மகன்கள் இருவரும் வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.