பெண் ஊழியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து நகரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

மன்னார் நகரசபையில் பணிபரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த 11.09 அன்று நிலுவையிலிருந்த ஆதனவரியை அறவிடச் சென்றபோது தாக்கப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் இன்றையதினம்(13.09)காலை 9.00 மணியளவில் மன்னார் நகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில், “பெண்கள் மீது வன்முறை காட்டும் கோழைகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்”

“வசந்தனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமா ரெலோ அமைப்பின் தலைமைத்துவம்?”

“பணபலமிருந்தால் அரச அலுவலரை அடிப்பது சாதாரண விடயமா?”போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஆதன வரியை அறவிடவென குறித்த பெண் ஊழியர் மற்றும் ஒரு  பெண் ஊழியருடன் ரெலோ கட்சி அலுவலகத்துக்கு சென்ற போது அங்கிருந்த கட்சி உறுப்பினருடன் ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து பெண் ஊழியர் கழுத்தைப் பிடித்து தள்ளப் பட்டதாகத் தெரிவிக்கப்படுக்கின்றது.

மேலும் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் உதவித் தேர்தல் ஆணையாளர் வே. சிவராஜா  சம்பவ இடத்திற்கு வருகை தந்து தேர்தல் காலத்தில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கக் கூடாது என்று அறிவுறுத்திய நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வருமான வரி உத்தியோகத்தர்கள்,மன்னார் மாதர் ஒன்றியம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.