சிங்கப்பூரில் முதன்முறையாக திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை போப் ஃபிரான்சிஸ்
சிங்கப்பூருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டுள்ள போப் ஃபிரான்சிஸ் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) மாலை இங்கு முதன்முறையாக திருப்பலி நிறைவேற்றினார்.
தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற அந்தத் திருப்பலியில் ஏறத்தாழ 50,000 பேர் பங்கேற்றனர்.
‘அறிவு இறுமாப்பு அடையச் செய்யும், அன்பு உறவை வளர்க்கும்’ எனும் திருவிவிலிய இறைவார்த்தையைக் குறிப்பிட்டு நற்செய்தி வழங்கிய திருத்தந்தை போப் ஃபிரான்சிஸ், 1986ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வருகையளித்திருந்த அப்போதைய போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் உரைத்த வாசகங்களைச் சுட்டி அதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
“இனம், சமயம் சார்ந்த நம்பிக்கை எல்லாவற்றையும் கடந்து அனைத்து மக்கள்மீதும் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையே அன்பை தனித்துவமாக்குகின்றது,” என்று இரண்டாம் ஜான் பால் கூறியிருந்தார்..
அன்றைய போப் குறிப்பிட்ட இந்தக் கூற்று நமக்கு மிகவும் முக்கியம் என்று வலியுறுத்திய போப்பாண்டவர், “ஏனெனில், மனிதர்கள் கைவண்ணத்தில் உருவாகும் வேலைப்பாடுகளைக் கண்டு வியப்பதைக் காட்டிலும் நாம் அரவணைத்துக் கைக்கொள்வதற்கு இன்னும் பெரிய அற்புதங்கள் உள்ளன என்பதை மேற்கூறிய வார்த்தைகள் நினைவூட்டும்”, என்றும் சொன்னார்.
“பல்லின வேறுபாட்டிற்கு இடையிலும் ஒற்றுமையுடன் திகழும் சிங்கப்பூர்ச் சமூகம், தேவாலயங்களில் நாம் காண்பது போல அன்றாடம் நாம் சந்திக்கும் சகோதர, சகோதரிகளைப் பாகுபாடின்றி மதிப்பதும் வியத்தகு செயல்,” என்றார் போப்.
திருப்பலி நிறைவேற்ற தேசிய விளையாட்டரங்கிற்கு வந்திருந்த போப்பாண்டவரைப் பல்லாயிரக்கணக்கானோர் உற்சாகம் கரைபுரள, கண்ணீர் மல்க வரவேற்றனர்.
சிங்கப்பூரர்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்தவாறே சிறப்பு வாகனத்தில் தேசிய விளையாட்டரங்கிற்குள் வலம் வந்த போப் ஃபிரான்சிஸ் திருத்தந்தையின் கரங்களில் பலர் சிறுபிள்ளைகளை வழங்கி நல்லாசி பெற்றனர்.
தமது கரங்களில் தவழ்ந்த சிறுபிள்ளைகளுக்கு ஆசியும் பரிசும் வழங்கினார் போப்பாண்டவர். வழிநெடுக தம் வாகனத்திற்கு அருகே மிகுந்த ஆவலுடன் வந்த வந்த சிறார், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், மூத்தோர் என பலதரப்பினருக்கும் போப்பாண்டவர் சிரித்த முகத்துடன் நல்லாசி வழங்கியவாறே கடந்து சென்றார்.
திருப்பலியில் பங்கேற்ற பலரும் உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டனர். இந்த பிரம்மாண்ட பிரார்த்தனையில் தம் குடும்பத்தினருடன் பங்கேற்ற திரு மைக்கேல் செல்வம், 62, தமது வாழ்நாளில் இதுவரை இரண்டு போப்பாண்டவர்களை நேரில் காண வாய்ப்பு கிடைத்தது தான் பெற்ற நற்பேறு என்றார்.
“முதல் முறை தனியாளாகவும், தற்போது மனைவி, மகள் என குடும்ப உறவுகளுடன் சந்திப்பதும் திருத்தந்தையைக் கண்டது பேராசீர்வாதம்,” என்று பூரிப்புடன் செல்வம்..
பிரார்த்தனையில் இருபதுக்கும் மேற்பட்ட தமது தேவாலயக் குழுவினருடன் பங்கேற்ற ஆரோக்கிய தாமஸ், 53, போப் ஃபிரான்சிஸ் சிங்கையில் நிறைவேற்றிய உன்னதத் திருப்பலியில் தேவாலயக் குடும்பத்தினராக பங்கேற்றது விவரிக்க முடியாத பெருமகிழ்வு என்று சொன்னார்.
முன்னதாக, திருப்பலியில் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், அமைச்சர்கள் விவியன் பாலகிருஷ்ணன், கா சண்முகம், கிரேஸ் ஃபூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருப்பலியில் பங்கேற்ற அனைவருக்கும் கத்தோலிக்கப் பேராயர் வில்லியம் கோ நன்றி தெரிவித்துக்கொண்டார்.