நோய்வாய்ப்பட்ட பெண்ணின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை புறக்கணித்த மருத்துவர்!
ஒரு நோயாளியின் இரு சிறுநீரகங்களையும் அகற்றிய பின், மீண்டும் சிறுநீரகத்தை பொருத்தாமல் , மருத்துவத் துறையின் கண்ணியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திய ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிரோஷன் எல். செனவிரத்னவின் பாரபட்சமான செயற்பாடுகள் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை சுகாதார செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பி.ஜி.என்.குமுதுனியின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு உடனடியாக மீண்டும் பொருத்தப்படாமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை அண்மையில் சுகாதார அமைச்சின் நிபுணரான வைத்தியர் பாலித மஹிபாலவினால் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. .
பரிசோதனை அறிக்கையின் பிரகாரம், இந்த நோயாளரின் சிறுநீரகத்தை அகற்றிய பின் , அதை பொருத்தாமல் இந்த விசேட வைத்தியர் 6 மாதங்களாக இழுத்தடித்து , சிறுநீரக மாற்று சிகிச்சையை தன்னிச்சையாக மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த புறக்கணிப்பு காரணமாக, இந்த பெண்மணிக்கு , ஆறு மாத காலத்திற்கு ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என 55 முறை இரத்தம் ஏற்றுவதற்கு கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் ஜயவர்தனபுர வைத்தியசாலை நிர்வாக அதிகாரியிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்த கொடூரமான உண்மை என்னவெனில், இந்த குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியர், நோயாளிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி ,அவரது தலவத்துகொடை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதுபோல அவரது நோயாளிகளை ஈவிரக்கமின்றி சுரண்டும் மோசடியில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
வைத்தியசாலையில் உள்ள இரண்டு பெண் வைத்தியர்கள் அடங்கிய குழுவினால் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் காரணமாக சிறப்பு மருத்துவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள நோயுற்ற பெண், இந்த கொடூரமான மனித குற்றத்திற்கு எதிராக நீதிமன்றத்தின் உதவியை நாட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.