அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்த ஒரே தலைவர் ரணிலே! – அமைச்சர் சுசில் புகழாரம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அரச ஊழியர்களுக்குச் சம்பள அதிகரிப்பு செய்ய வழி செய்திருக்கின்றார் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“2022 ஆம் ஆண்டில் நாட்டில் பல பிரச்சினைகள் காணப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகொடுக்காமையினால் மாற்றுக் கட்சி உறுப்பினர்களுடன் வேலை செய்ய வேண்டிய நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வந்தது. நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தச் சவாலையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரச ஊழியர்களைப் பணிப் புறக்கணிப்புக்களுக்கு மாத்திரம் பயன்படுத்திவிட்டு கைவிட்டு விடுவர். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்ய வழி செய்திருக்கின்றார்.
இன்று பங்களாதேஷில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு வரிசை யுகம் தோன்றியுள்ளது. இதே கஷ்டங்களை இலங்கையும் அனுபவித்தது. அவ்வாறானதொரு கஷ்டத்தை கடந்தே இன்றைய நிலைக்கு வந்திருக்கின்றோம்.
இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் பெற்றக் கடனையும் நாம் திருப்பிச் செலுத்தியிருக்கின்றோம்.” – என்றார்.