கோட்டாவை விடவும் மோசமான வழியில் அநுர! – நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என்று ரணில் திட்டவட்டம்.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை இறக்குமதிப் பொருளாதாரமா அல்லது ஏற்றுமதிப் பொருளாதாரமா எனத் தாம் கேள்வி எழுப்பி, 3 நாட்களாகியும் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அவன் திருடன், இவன் திருடன் என்று கூறாமல் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தைத் தேசிய மக்கள் சக்தி முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திஸாநாயாக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விட மோசமாக நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கத் தயாராகி வருகின்றார் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

புள்ளி விவரங்களுடன் விடயங்களை முன்வைப்பது போல் திசைகாட்டி தனது வரவு – செலவுத் திட்டம் பற்றிய உண்மைகளை புள்ளி விவரங்களுடன் மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எனவே, மக்களை ஏமாற்றாமல் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் உண்மையான புரிதலுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அரசு ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“திசைகாட்டிக்கு வாய்ப்பளித்து எதிர்காலத்தைச் சூனியமாக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இப்போது அநுரகுமார என்னை விவாதத்துக்கு அழைக்கின்றார். ஆனால், நான் கேட்ட ஒரு கேள்விக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. இவ்வாறானவர்களிடம் எவ்வாறு எதிர்காலத்தைக் கையளிப்பது.?

மறுமுனையில் சஜித் பிரேமதாஸ எல்லாவற்றையும் இலவசமாகத் தருவதாகச் சொல்கின்றார். அவ்வாறு இலவசமாக வழங்க வேண்டுமாயின் அமெரிக்காவுக்கு நிகரான பொருளாதாரம் இலங்கைக்கு இருக்க வேண்டும். எனவே, செப்டெம்பர் 21 ஆம் திகதி உங்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது. டொலரும் இருக்காது.”

Leave A Reply

Your email address will not be published.