வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் மக்களை, கட்டியணைத்து ஆறுதல் கூறிய தாய்லாந்துப் பிரதமர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாய்லாந்தின் சியாங் ராய் பகுதிக்கு அந்நாட்டின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் செப்டம்பர் 13ஆம் தேதியன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

மீட்புப் பணிகளில் அயராது ஈடுபட்டு வரும் தொண்டூழியர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் வெள்ள நிலவரம் குறித்து தெரிந்துகொள்ளவும் அவர் அங்கு சென்றார்.

தொண்டூழியர்களின் கடுமையான உழைப்புக்கும் தியாகங்களுக்கும் தாய்லாந்து மன்னர் நன்றி தெரிவித்துக்கொண்டதாகப் பிரதமர் பேடோங்டார்ன் கூறினார்.

வெள்ளத்தில் சிக்கி பட்டினியால் வாடும் மக்களுக்குத் தாய்லாந்து ராணுவம் உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால் சில இடங்களுக்கு ஹெலிகாப்டர், ஜெட் ஸ்கீ மூலம் மட்டுமே செல்ல முடிவதாக ராணுவம் தெரிவித்தது.

வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஏறத்தாழ 300 பேரைத் தாய்லாந்துக் கடற்படை மீட்டது.

இதற்கிடையே, தாய்லாந்து-மியன்மார் நட்புப் பாலத்துக்குப் பிரதமர் பேடோங்டார்ன் சென்றார்.

சாய் நதிக்கு மேல் அந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்து வரும்போதிலும் அவ்விடம் சேறும் சகதியுமாகக் காட்சி அளிக்கிறது.

இதனால் முக்கிய எல்லைப் பொருளியல் மண்டலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களையும் பிரதமர் பேடோங்டார்ன் சந்தித்தார்.

அவர்களைக் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய இழப்பீடு வழங்கலாம் என்பது குறித்து உடனடியாக ஆராயப்படும் என்றார் அவர்.

அங்குள்ள மக்கள் கைவிடப்படமாட்டார்கள் என்று அவர் உறுதி அளித்தார்.

இதற்கிடையே, நோங் காய் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களிலும் வெள்ளம் கரைபுரண்டோடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்புக் குறிப்புகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ளும்படி அப்பகுதி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.