செருப்பை வெளியிலேயே கழற்றிவிடச் சொன்ன மருத்துவருக்கு அடி உதை.
செருப்பை வெளியிலேயே கழற்றிப் போட்டுவிட்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழையும்படி சொன்ன மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் அடித்து உதைத்தனர்.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம், பாவ்நகரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 13) நிகழ்ந்தது.
இதன் தொடர்பில் காவல்துறை மூவரைக் கைதுசெய்துள்ளது.
சம்பவ நாளன்று தலையில் அடிபட்டதற்காக பெண் ஒருவர் அந்த மருத்துவமனைக்குச் சென்றார். படுக்கையில் அப்பெண் இருக்க, அவ்வறையில் சில ஆடவர்கள் நின்றிருந்தனர்.
அப்போது அவ்வறைக்குள் வந்த ஜெய்தீப்சின் கோஹில் என்ற மருத்துவர், வெளியில் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே வரும்படி அந்த ஆடவர்களிடம் சொன்னார்.
இதனையடுத்து, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த ஆடவர்கள் மருத்துவர் கோஹிலைத் தாக்கத் தொடங்கினர். படுக்கையில் இருந்த பெண் நோயாளியும் அங்கிருந்த தாதியும் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றும், அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை.
இச்சம்பவம் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.
சண்டையால் அவ்வறையிலிருந்த மருந்துப்பொருள்களும் சாதனங்களும் சேதமடைந்ததையும் காணொளி காட்டியது.
கோல்கத்தாவில் சென்ற ஆகஸ்ட் மாதம் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.