பெண்களுக்கு ஊதியத்துடன் 6 நாள்கள் மாதவிடாய் விடுமுறை!

கர்நாடகத்தில் உள்ள தனியார், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் 6 நாள்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் விடுமுறை

கர்நாடகத்தில் மாதவிடாய் விடுமுறை குறித்து ஆய்வு செய்ய மருத்துவர் சப்னா முகர்ஜி தலைமையில் மாநில அரசு குழு அமைத்தது. இந்த குழுவானது, ஆண்டுக்கு 6 நாள்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

ஆய்வுக் குழுவின் அறிக்கை குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் மாநில தொழில்துறை செயலாளர் முகமது மொஹ்சின் கூறியதாவது:

இந்த அறிக்கை குறித்து அனைத்து துறைகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அதன் ஒப்புதலுக்கு பிறகு சட்டப்பேரவையில் இந்த திட்டம் குறித்த அறிக்கை முன்வைக்கப்படும்.

முதலில், தனியார் நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு கொள்கை உருவாக்கப்பட்டு, அரசு துறைகளிலும் கட்டாயமாக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற பரிந்துரை

உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “இது அரசின் கொள்கை முடிவை சார்ந்தது, நாங்கள் உத்தரவிட முடியாது. மத்திய தொழில்துறை இதுகுறித்து கொள்கை வகுக்கலாம்” எனப் பரிந்துரைத்தது.

எந்தெந்த மாநிலங்களில் விடுமுறை?

உலகளவில் ஸ்வீடன், இதாலி, தென் கொரியா, தைவான் மற்றும் ஜப்பான் நாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில், பிகார் மாநிலத்தில் முதல்முறையாக 1992ஆம் ஆண்டு முதல் மாதத்துக்கு 2 நாள்கள் மாதவிடாய் விடுமுறை அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம், ஒடிஸா மாநிலங்களில் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.