மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு!

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 2,000 ரூபாய் என்றும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 6,000 ரூபாய் என்றும்; 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 4,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 8,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

அதேபோல், கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாய் என்பதை 12 ஆயிரம் ரூபாய் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார். மேலும், தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 7 ஆயிரம் ரூபாய் என்பதை 14 ஆயிரம் ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

மேலும், தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 7 ஆயிரம் ரூபாய் என்பதை 14 ஆயிரம் ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி ஊக்கத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்காக 14 கோடியே 90 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அனுமதித்து 10.9.2024 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.

அதேபோல் பள்ளி, கல்லூரி படிப்புகளுடன், மாற்றுத் திறனாளி மாணவ- மாணவிகள் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்னும் விழைவோடு ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கமளிப்பதற்காக அவர்களுக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 50 மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில் 50 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.