லெபனான்மீது கடுமையான தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.

இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமை இரவு லெபனானின் தெற்குப் பகுதியில் கடுமையான வான்வழித் தாக்குதலை மேற்கொண்டதாக லெபனானின் பாதுகாப்பு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பகையை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இரு தரப்புகளும் அமைதிகாக்க வேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் குரல் கொடுத்துள்ளன.

அரசதந்திர முறையில் தீர்வு எட்டப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட பதற்றமான சூழல் அச்சத்தையும் அக்கறையையும் ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியது.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவும் உடனடியாக சண்டை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கீழ் உள்ள அமைதிப் படையும் சண்டை நிறுத்தம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு கிட்டத்தட்ட 2 மணி நேரம் பல நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை போர் விமானம் கொண்டு லெபனானின் தெற்குப் பகுதியில் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மோசமான தாக்குதல் என்று ஹிஸ்புல்லா தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

இவ்வாரத் தொடக்கத்தில் லெபனானில் உள்ள பல பகுதிகளில் அகவிகள் (பேஜர்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. அதன் பிறகு அலைபேசிகள் (walkie talkies) பல வெடித்துச் சிதறின.

இந்தத் தாக்குதலில் 3,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். 37 பேர் கொல்லப்பட்டனர். இதை இஸ்ரேல் செய்ததாக ஹிஸ்புல்லா குற்றஞ்சாட்டுகிறது.

இஸ்ரேல் எல்லைமீறி நடந்து கொண்டதாகவும், இது போருக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கையாக உள்ளதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.