அரசியல் தலைமை மக்களின் முடிவை மதிக்க வேண்டும்! – கரு ஜயசூரிய கோரிக்கை.

மக்களின் முடிவுகளை மதிக்கும் பொறுப்புணர்வுள்ள அரசியல் தலைமைத்துவத்தை ஜனாதிபதி வேட்பாளர்களும், அரசியல் கட்சியின் தலைவர்களும் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தங்களின் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாய்ப்பு இலங்கை மக்களுக்குக் கிடைத்துள்ளது.

இந்த உரிமையை எவ்வித தலையீடும் இன்றி அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்த முடியும்.

இந்தச் சூழ்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களை விட கட்சியின் தலைவர்களுக்கு மிகப் பெரும் பொறுப்புணர்வுள்ளது. மக்களின் முடிவுகளை மதிப்பதே அவர்களின் மிக முக்கிய கடமை.

மக்களின் முடிவுகளை மதிப்பது, நாட்டின் சட்டங்களையும், சமூக நீதியின் அடிப்படைக் கொள்கைகளையும் மதிப்பது மாத்திரமல்ல, அடிப்படை தார்மீக நாகரிக தராதரஙகளைக் கடைப்பிடிப்பதுமாகும்.

அமைதியான வன்முறைகள் அற்ற தேர்தல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு இலங்கையின் தேர்தல் சமூகம் சமீப காலங்களில் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்த முயற்சிகள் தொடர வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் இலங்கை பங்களாதேஷ் போன்ற நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்து ஏற்படலாம்.

சில ஆபிரிக்க நாடுகளில் தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் அந்த நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை உணர்வதும், அவ்வாறான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமாகும்.

மேலும், இன்று 21 ஆம் திகதி ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர், தேசத்துக்கான பெரும் பொறுப்புணர்வை ஏற்றுக்கொள்கின்றார்.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் உரிய முறையில் இடம்பெறுவதை உறுதி செய்வதும், மக்கள் ஜனநாயக நடைமுறைகளில் முழுமையாக ஈடுபடுவதற்கு அனுமதிப்பதும் முக்கியமான விடயங்கள் ஆகும்.

மேலும், தனிநபர் ஒருவருக்கு அளவுக்கதிகமான அதிகாரங்களை வழங்கும் தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதன் மூலம் தற்போதைய தேர்தல் முறைமையைச் சீர்திருத்துவதும் அவசியம்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.