இந்தியாவில் ஐபோன்-16; முதல் நாள் விற்பனை 25% கூடியது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ‘ஐபோன்- 16’ வரிசை திறன்பேசிகளின் விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) தொடங்கிய நிலையில், முதல் நாள் விற்பனை கடந்த ஆண்டைவிட 25 விழுக்காடு அதிகமாக நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கைப்பேசிகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஐபோன்-15 ப்ரோ, ஐபோன்-15 ப்ரோ மேக்ஸ் கைப்பேசிகளை அந்நிறுவனம் முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900க்கு அறிமுகப்படுத்திய நிலையில், இம்மாதம் 9ஆம் தேதி கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய ஐபோன்-16, 16 புரோ கைப்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், ஐபோன்-16 மற்றும் 16 புரோ திறன்பேசிகளின் விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) தொடங்கியது.
மும்பை, டெல்லியில் உள்ள ஆப்பிள் கடைகளுக்கு வெளியே கூட்டம் கூட்டமாக விடிய விடிய ஆவலுடன் காத்திருந்த ஐபோன் பிரியர்கள் ஐபோன் 16 மற்றும் 16 புரோ கைப்பேசிகளை வாங்கிச் சென்றனர்.
முதல் நாள் விற்பனை சிறப்பாக இருந்தததாகவும் கடந்த ஆண்டை விட 25 விழுக்காடு அதிகமாக நடைபெற்றுள்ளதாகவும் ஒரு சில விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐபோன்-16 வரிசை திறன்பேசிகளின் விலை அனைவரும் வாங்கக்கூடிய விதத்தில் உள்ளதே இந்த விற்பனை வெற்றிக்கு காரணம் என்றும் வெளியீட்டின் காலாண்டில் ஐபோன் 16 மற்றும் 16 புரோ கைப்பேசி விற்பனை ஆண்டுக்கு 30 விழுக்காடு வளர்ச்சியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.